தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) படைத்துள்ள வரலாற்றுச் சாதனை, கடல் கடந்தும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் இந்த மாபெரும் வெற்றியைப் பாராட்டி, இலங்கை நாடாளுமன்றத்திலேயே வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இலங்கை நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசிய தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம், “தமிழகத்தில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள தவெக தலைவர் விஜய்க்கு இலங்கையின் உயரிய சபை வாயிலாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
🔴🔴🔴 pic.twitter.com/HxHUTLQiN4
— TVK Virtual Warriors HQ (@TVKWarriorsHQ) May 5, 2026
ஈழத் தமிழர் விவகாரங்களில் புதிய தமிழக அரசும், இந்திய மத்திய அரசும் இணைந்து செயல்படும் என்ற புதிய நம்பிக்கையை இந்த வெற்றி ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் இந்த விஸ்வரூப வெற்றியை இலங்கையின் முன்னணி தமிழ் நாளிதழ்களான வீரகேசரி, தினகுரல் போன்றவை தங்களது முதல் பக்கத்தில் தலைப்புச் செய்திகளாக வெளியிட்டுப் புகழ்ந்துள்ளன.
60 கால திராவிட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, தமிழக அரசியல் வரலாற்றில் புதிய திருப்பத்தை விஜய் ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருக்கும் ஊடகங்கள் பாராட்டு மழையில் நனைத்து வருகின்றன.
கடந்த காலங்களில் கச்சத்தீவு மீட்பு குறித்து விஜய் பேசிய கருத்துகள் இலங்கையில் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தாலும், தற்போது அவரது வெற்றியை உலகத் தமிழர்களின் வெற்றியாகவே ஈழ மக்கள் பார்க்கின்றனர்.
மொத்தத்தில், எல்லையைத் தாண்டி ஈழத் தமிழர்களின் மனங்களையும் வென்றுள்ள விஜய், சர்வதேச அரசியலிலும் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளார்.
