தமிழகத்தில் திமுக ஆட்சியில் கொசுத்தொல்லை அதிகரித்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சென்னையில் மழைநீர் வடிகால்கள் மற்றும் கால்வாய்களைச் சரியாகப் பராமரிக்காததால் கொசுக்கள் பெருகி, மாலை நேரங்களில் மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக நடந்ததாகவும், ஆனால் தற்போது அரசு ஊழியர்களைச் சுய விளம்பரப் பணிகளுக்குப் பயன்படுத்துவதால் கொசுக்கள் ராஜ்ஜியம் நடத்துவதாகவும் அவர் சாடியுள்ளார்.
கொசுக்கடியால் சென்னையில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாகவும், கடந்த ஜனவரி முதல் தற்போது வரை சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். குறிப்பாகத் தேர்வு நேரத்தில் பள்ளி மாணவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவது கவலையளிப்பதாகக் கூறியுள்ளார்.
கொசு ஒழிப்புப் பணிகளுக்காகச் சென்னை மாநகராட்சி ஒதுக்கிய சுமார் 16.40 கோடி ரூபாய் என்னவானது என்றும், இதில் ஊழல் நடந்துள்ளதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களின் சுகாதாரத்தில் அலட்சியம் காட்டி வரும் திமுக அரசு, உடனடியாகக் கொசு மருந்து அடிக்கும் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
வீடுகள் தோறும் தண்ணீர் தேங்கியுள்ளதா என ஆய்வு செய்யவும், காய்ச்சல் முகாம்களை நடத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள அவர், வெறும் ‘போட்டோ ஷூட்’ நடத்திக்கொண்டு மக்களின் உயிரோடு விளையாடும் இந்த ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
