தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக இப்போதே மும்முரமாகத் தயாராகி வருகிறது. ஐபேக் உள்ளிட்ட நான்கு தேர்தல் வியூக நிறுவனங்கள் திமுகவுக்காக வேலை செய்து வரும் நிலையில், வேட்பாளர் தேர்வு மற்றும் தொகுதி நிலவரங்களை இந்த நிறுவனங்களே கவனிப்பது கட்சி நிர்வாகிகளிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், டெல்லியில் பணியாற்றும் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் வழங்கிய ரகசிய ஆய்வு அறிக்கை திமுக தலைமையைத் திடுக்கிட வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த அறிக்கையின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வரும் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரியவந்துள்ளது. குறிப்பாக, திமுகவின் பலமாக இருந்த சிறுபான்மையினர் வாக்குகள் இந்த முறை விஜய்க்குச் சாதகமாகத் திரும்ப வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்காளர்களின் ஆதரவும் தவெக-வுக்கு இருப்பதால், 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற திமுகவின் இலக்குக்குச் சவால்கள் எழுந்துள்ளன.

இருப்பினும், அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் இந்த முறை திமுகவுக்குச் சாதகமான சூழல் நிலவுவது அக்கட்சிக்குச் சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

இந்தச் சவால்களைச் சமாளிக்க திமுக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, மகளிர் உரிமைத் தொகை பெறும் பயனாளிகளின் கணக்கில் திடீரென 5,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

தவெக செல்வாக்குடன் இருக்கும் தொகுதிகளைக் கண்டறிந்து, அங்கு சிறப்பு வியூகங்களை வகுக்க திமுக திட்டமிட்டுள்ளது. எப்படியாவது மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்ற நோக்கில் ஆளுங்கட்சி தனது தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.