ஜபல்பூர் ரயில் நிலையத்தில் சினிமா படப்பாணியில் ஒரு திக் திக் சம்பவம் நடந்துள்ளது. ஏப்ரல் 6-ம் தேதி அதிகாலை, ரயிலில் ஒரு பெண்ணின் பையைத் திருட முயன்ற ஹர்விந்தர் சிங் என்ற திருடனை ரயில்வே பாதுகாப்புப் படையினர் பிடிக்க முயன்றனர். போலீசாரிடம் இருந்து தப்பிக்க அந்தத் திருடன் அங்கிருந்த ஒரு பாசி படிந்த குளத்தில் குதித்து தலைமறைவானான்.

சுமார் 5 மணி நேரமாகத் தண்ணீருக்குள்ளேயே ஒளிந்திருந்த அவன், மூச்சு விடுவதற்காக தாமரைத் தண்டின் துவாரத்தைப் பயன்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினான். கடைசியில் நீச்சல் வீரர்களின் உதவியோடு அந்தத் திருடனை போலீசார் பிடித்து வெளியே இழுத்தனர்.

விசாரணையில் அவன் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் கைவரிசை காட்டிய ஒரு பயங்கரமான கொள்ளையன் என்பது தெரியவந்தது.

பெண்களையும் முதியவர்களையும் குறிவைத்து ரயில்களில் திருடுவதையே வழக்கமாகக் கொண்ட இவன் மீது பல மாநில போலீசில் வழக்குகள் உள்ளன. தற்போது ஜபல்பூர் போலீசார் அவனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.