மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், இந்தியாவின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிலிருந்து எரிபொருள் ஏற்றிய கப்பல்கள் இன்று கர்நாடகாவின் மங்களூரு துறைமுகத்தை வந்தடைந்தன. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் விநியோகப் பாதை பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் நிலவியது.
இந்த இக்கட்டான நேரத்தில், அமெரிக்காவின் டெக்சாஸிலிருந்து ‘பிக்ஸிஸ் பயனியர்’என்ற கப்பல் எல்பிஜி சிலிண்டர் விநியோகத்துடனும், ரஷ்யாவிலிருந்து ‘அக்வா டைட்டன்’ என்ற கப்பல் கச்சா எண்ணெயுடனும் இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளது ஒரு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
இந்த இரட்டை வரவானது இந்திய சந்தையில் நிலவி வந்த எரிபொருள் நெருக்கடியை ஓரளவிற்குத் தணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ரஷ்யாவிலிருந்து சீனாவுக்குச் செல்ல வேண்டிய கப்பலை அமெரிக்காவின் தற்காலிக அனுமதியுடன் இந்தியா தன் பக்கம் திருப்பியிருப்பது ஒரு முக்கிய ராஜதந்திர வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலையை நிலைப்படுத்தவும், தட்டுப்பாடின்றி விநியோகம் செய்யவும் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சவாலான உலகளாவிய சூழலிலும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுடனும் இந்தியா கொண்டுள்ள சுமுகமான உறவு, நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய உறுதுணையாக அமைந்துள்ளது.
