ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளுக்கு ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் (HPCL) அதிரடி விளக்கம் அளித்துள்ளது.

நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாகவும், வட மாநிலங்களில் மக்கள் சமையல் சிலிண்டர்களைக் கள்ளச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்குவதாகவும் வெளியான தகவல்கள் முற்றிலும் வதந்தி என அந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்குக் குறுஞ்செய்தி வாயிலாகத் தெரிவித்துள்ளது. போரினால் கப்பல் போக்குவரத்தில் சிறு தாமதங்கள் ஏற்பட வாய்ப்பிருந்தாலும், இந்தியாவில் தேவைக்கு அதிகமான அளவில் எரிபொருள் மற்றும் எல்பிஜி சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளதாகவும், பொதுமக்கள் தேவையற்ற பீதியடைய வேண்டாம் என்றும் எச்பிசிஎல் நிறுவனம் உறுதிபடக் கூறியுள்ளது.

குறிப்பாகத் தமிழ்நாட்டைப் பொறுத்தவரைப் போதுமான அளவு எரிபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால், ஆதாரமற்ற காணொளிகளையும் செய்திகளையும் நம்ப வேண்டாம் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.