ஈரான் மற்றும் இஸ்ரேல் – அமெரிக்கக் கூட்டுப் படைகளுக்கிடையே நிலவி வரும் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், துபாயில் சிக்கியிருந்த பிரபல நடிகர் அஜித் குமார் பத்திரமாக சென்னை திரும்பினார். அவரது வருகையைத் தொடர்ந்து, மஹிந்திரா நிறுவனம் அவருக்கு அதிநவீன கார் ஒன்றை பரிசாக வழங்கி கௌரவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ஈரான் தனது பதிலடியைத் தொடங்கியது. இஸ்ரேல் மட்டுமின்றி, அமெரிக்காவின் நட்பு நாடுகளான பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபுதாபி ஆகிய நகரங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.
இதற்கிடையில் சர்வதேச கார் பந்தயப் பயிற்சிக்காக துபாயில் தங்கியிருந்த நடிகர் அஜித் குமார், இந்த திடீர் ஏவுகணைத் தாக்குதல்களால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சென்னை திரும்ப முடியாமல் அங்கு சிக்கிக்கொண்டார். இது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கமளித்த அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா, அஜித் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார். போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளுக்குப் பிறகு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அஜித் பத்திரமாக சென்னை வந்தடைந்தார்.
சென்னை திரும்பிய அஜித்தின் கார் பந்தய ஆர்வத்தைப் பாராட்டும் வகையில், மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவுத் தலைவர் ஆர். வேலுசாமி அவருக்கு ஒரு சிறப்பான பரிசை வழங்கினார். உலகின் முதல் ‘ஃபார்முலா இ’ (Formula E) கருப்பொருளில் உருவான மஹிந்திரா ‘BE FORMULA E EDITION’ எஸ்யுவி (SUV) காரை அஜித்திற்கு அவர் நேரில் வழங்கினார். மேலும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும் தனது இலட்சியத்தில் உறுதியாக இருக்கும் ஒரு கார் பந்தய வீரருக்கு வழங்கப்பட்ட இந்த கௌரவம், அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
