அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவர மூன்று முக்கிய நிபந்தனைகளை ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியன் அறிவித்துள்ளார். அதேசமயம், அண்டை நாடுகளான வளைகுடா அரபு நாடுகள் மீதான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் அதிபர் இது குறித்து புதன்கிழமை இரவு தனது ‘எக்ஸ்’ (X) தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் போரை நிறுத்த ஈரான் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் வருமாறு, போரினால் ஈரானுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை (அணுசக்தி உள்ளிட்டவை) சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். எதிர்காலத்தில் ஈரான் மீது மீண்டும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்கப்படாது என்பதற்கு உறுதியான சர்வதேச உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ரஷியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் ஆலோசித்ததாகக் குறிப்பிட்ட பெசஸ்கியன், “சியோனிச ஆட்சி (இஸ்ரேல்) மற்றும் அமெரிக்காவால் தூண்டப்பட்ட இந்தப் போரை முடிக்க இதுவே ஒரே வழி” என்று தெரிவித்துள்ளார். ஈரானின் ‘சட்டபூர்வ உரிமைகள்’ என்பது எதைக் குறிக்கிறது என்பதை அவர் விளக்கவில்லை என்றாலும், அமைதி வழியில் அணுசக்தித் திட்டத்தை முன்னெடுப்பதையே ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயல்வதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் குற்றம் சாட்டி வருகின்றன.

குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களால் பெரும் பதற்றம் நிலவி வந்த சூழலில், இன்றுடன் (வியாழக்கிழமை) போர் 13-ஆவது நாளை எட்டியுள்ளது. மேலும் இந்நிலையில், ஈரான் அதிபரின் இந்த அமைதி முயற்சி மற்றும் நிபந்தனைகள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.