அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுசபையின் 80-வது அமர்வு பொதுவிவாதத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் இந்திய தூதர் பெட்டல் கஹ்லோட் ஆகியோர் மேடையில் பரபரப்பாக பேசினர். பொதுசபை அமர்வில் பேசினபோது பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போரை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலையிட்டு நிறுத்தியதாகவும், டிரம்ப் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அது பெரும் பேரழிவாக முடிந்திருக்க வாய்ப்பு இருந்ததாகவும் கூறினார்.
அத்துடன், காஷ்மீர் பிரச்சனை, சிந்து நதிநீர் ஒப்பந்தம், இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய சம்பவம் உள்ளிட்ட விவகாரங்களையும் அவர் எடுத்துக்காட்டினார். இது தொடர்பாக, ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரக செயலாளர் பெட்டல் கஹ்லோட் கடுமையாக எதிர்வினை தெரிவித்து பேசினார். அவர் கூறியதாவது: “பாகிஸ்தான் பிரதமர் ஐ.நா. மேடையில் மீண்டும் ஒரு முறை அபத்தமான நாடகத்தை அரங்கேற்றியுள்ளார். பயங்கரவாதத்தை நேரடியாக அல்லது மறைமுகமாக மகிமைப்படுத்துகிறார். பயங்கரவாதம் பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையின் மையமாகவே உள்ளது.”
“பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ என்ற பயங்கரவாத அமைப்பை பாகிஸ்தான் பாதுகாக்கிறது. ஒசாமா பின் லாடனுக்கு அடைக்கலம் அளித்தது போலவே, தற்போது பல பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவு தருகிறது.” அத்துடன், மே 9 ஆம் தேதி வரை பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் எச்சரிக்கைகளை விடுத்ததாகவும், ஆனால் மே 10 ஆம் தேதி நேரடியாக இந்தியாவிடம் தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சியதாகவும் கஹ்லோட் தெரிவித்தார்.
“இந்தியா மீது நடத்தப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக நாங்கள் தற்காப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். அந்தச் சூழ்நிலையில், பாகிஸ்தானின் விமானப் படைத் தளங்கள் பல அழிக்கப்பட்டன,” என்று அவர் குறிப்பிட்டார். “ஏதேனும் அமைதி விருப்பம் பாகிஸ்தானுக்கு இருந்தால், அனைத்து பயங்கரவாத முகாம்களையும் மூட வேண்டும். இந்தியா தேடிக் கொண்டிருக்கும் பயங்கரவாதிகளை ஒப்படைக்க வேண்டும். அணு ஆயுத மிரட்டலின் பின்னாலிருந்து பயங்கரவாதத்தை நடத்துவது உலகத்திற்கே அபாயம்.”
மேலும் “இந்தியா ஒருபோதும் பயங்கரவாதம் மற்றும் மிரட்டல்களுக்கு இடம் தரப்போவதில்லை. இது எங்கள் உறுதியான நிலைப்பாடாகும்,” என்றார். இந்தியத் தூதரின் தாக்குப்பிடிப்பு, ஐ.நா. மன்றத்தில் இந்தியாவின் திடமான வெளிப்பாடாக கருதப்படுகிறது.
