ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றங்களைத் தணிக்கும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையை நடத்தப் பாகிஸ்தான் முன்வந்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான சமீபத்திய கருத்துப் பரிமாற்றங்கள், முடங்கிக் கிடந்த ராஜதந்திர வழிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான அறிகுறிகளாகப் பார்க்கப்படுகின்றன.
அமெரிக்காவுடன் நெருக்கமான உறவைப் பேணி வரும் அதே வேளையில், பிராந்திய நாடுகளுடனும் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வரும் பாகிஸ்தான், தன்னை ஒரு ‘நடுநிலைத் தூதராக’ நிலைநிறுத்த முயல்கிறது. மேற்கு ஆசியாவில் அமைதியை நிலைநாட்டவும், உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் குறைக்கவும் இந்தப் பேச்சுவார்த்தை அவசியம் என இஸ்லாமாபாத் கருதுகிறது.
இந்தப் பேச்சுவார்த்தையில் ஈரான் பங்கேற்குமா என்பதில் இன்னும் உறுதியான தகவல் இல்லை. இருப்பினும், பேச்சுவார்த்தை உறுதி செய்யப்பட்டால், ஈரானின் சார்பில் அதன் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் கலந்துகொள்ளக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தெஹ்ரான் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தல் எதுவும் வரவில்லை.
அமெரிக்கா பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகச் சமிக்ஞைகளை வெளிப்படுத்தினாலும், ஈரான் அதனைத் தொடர்ந்து மறுத்து வருகிறது. அமெரிக்காவுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என்பதில் ஈரான் உறுதியாக இருப்பதால், இந்தச் சந்திப்பு எப்போது நடக்கும் என்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
பாகிஸ்தானின் இந்த முயற்சி வெற்றி பெற்றால், அது போர் நிறுத்தத்திற்கும், பிராந்தியத்தில் நிரந்தர அமைதிக்கும் வழிவகுக்கும். சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை நிலவி வரும் சூழலில், இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருக்கும் இந்தப் பேச்சுவார்த்தை உலக நாடுகளால் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.
மேலும் அதே நேரத்தில் பாகிஸ்தான் நடுநிலைக்கு முன் வந்ததாக கூறி அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அவர்களை பாராட்டிய நிலையில் அமெரிக்காவின் 15 கண்டிஷன்களையும் பாகிஸ்தான் மூலமாக ஈரானுக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
