தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த போதிலும், பாலிவுட்டில் நுழையும்போது தான் சந்தித்த புறக்கணிப்புகள் மற்றும் சவால்கள் குறித்து நடிகை ரகுல் பிரீத்சிங் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
தமிழில் கமல்ஹாசனுடன் ‘இந்தியன்-2’, சிவகார்த்திகேயனுடன் ‘அயலான்’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானவர் ரகுல் பிரீத்சிங். தெலுங்கில் டாப் ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நட்சத்திரமாக உயர்ந்த இவர், பின்னர் பாலிவுட் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார். சமீபத்தில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்துகொண்ட அவர், தனது ஆரம்பகால பாலிவுட் பயணத்தைப் பற்றி ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
பாலிவுட் அனுபவம் குறித்து அவர் கூறுகையில்: “தெலுங்கு திரையுலகில் நான் ஒரு பெரிய நட்சத்திரமாக இருந்திருக்கலாம். ஆனால், பாலிவுட்டில் என்னை ஒரு புதுமுகமாகவே பார்த்தார்கள். அங்கு நான் எனது திரைப்பயணத்தை மீண்டும் பூஜ்யத்தில் இருந்தே தொடங்க வேண்டியிருந்தது. சினிமா பின்னணி இல்லாத வெளியாட்கள் என்பதால் எங்களுக்கு அங்கு சிவப்பு கம்பள வரவேற்பு எதுவும் கிடைக்காது.”
மேலும் அவர் பேசுகையில், “பாலிவுட் வாய்ப்புகளுக்காக நான் பல இயக்குநர்களுக்கும், நடிகர்களுக்கும் போன் செய்தேன். ஆனால், அவர்கள் எனது அழைப்புகளை ஏற்கவில்லை. அப்படியே போனை எடுத்தாலும் மிகவும் அலட்சியமாகவே பதிலளிப்பார்கள். ஒருமுறை பட வாய்ப்பிற்கான ‘ஆடிஷன்’ (Audition) ஒன்றில் கலந்துகொள்ள அலுவலகம் ஒன்றில் மணிக்கணக்கில் காத்திருக்க வைக்கப்பட்டேன். தென்னிந்தியாவில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்த பிறகும் அங்கு நான் சந்தித்த இத்தகைய அவமானங்கள் மற்றும் புறக்கணிப்புகள் எனக்கு மிகுந்த மன உறுதியையே தந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் மற்றும் வெளியாட்கள் சந்திக்கும் நெருக்கடிகள் குறித்துப் பல நடிகைகள் குரல் கொடுத்து வரும் நிலையில், ரகுல் பிரீத்சிங்கின் இந்தப் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
