தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைப்பொருள் புழக்கம் மிகத் தீவிரமாக வேரூன்றியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதனை ஒழிக்க எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் தவெக அரசும், முதலமைச்சர் ஜோசப் விஜயும் சடங்காக உறுதிமொழி ஏற்பதால் எந்தப் பயனுமில்லை என கடுமையாக விமர்சித்துள்ளார்.

​சமீபத்தில் போதைப்பொருள் விற்பனை குறித்து காவல்துறையிடம் புகார் அளித்த மாணவர் ஒருவர், சக மாணவர்களாலேயே கொடூரமாக அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இத்தகைய அச்சமூட்டும் சூழல் நிலவும் போது, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் கலாச்சாரம் எந்த அளவிற்கு ஆழமாக ஊடுருவியுள்ளது என்பதை இந்த விபரீத சம்பவம் வெளிச்சம்போட்டு காட்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

​போதைப்பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டிய ஆளும் தவெக அரசு, வெறும் மேடை நாகரீகத்திற்காக மாணவர்கள் முன்னிலையில் போதை ஒழிப்பு உறுதிமொழியை எடுத்து விளம்பரம் தேடிக் கொள்கிறதே தவிர, களத்தில் இறங்கி அதைத் தடுப்பதற்கான எந்த தீவிர முயற்சியையும் எடுக்கவில்லை என்று அவர் சாடியுள்ளார்.

​புகார் அளிக்கும் மாணவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலநிலை இருக்கும் போது, அரசு எடுக்கும் இந்த வெறும் போலி உறுதிமொழிகளால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை என்று கூறியுள்ள டிடிவி தினகரன், இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதை கலாச்சாரத்தை வேரோடு அறுக்க அரசு உடனடி அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.