உலகிற்கு மானுடத்தையும், எல்லையற்ற கருணையையும் போதித்த பேரன்பின் தாய் தமிழ் என்று புகழாரம் சூட்டியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்த உயிர்மொழியைப் பற்றி தவறாகப் பேசிய அமைச்சர் மரியவில்சன் உடனடியாகச் சட்டமன்றத்தில் மனம்வருந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் மரியவில்சன், தமிழ் மொழி அன்பைப் போதிக்கவில்லை எனக் குறிப்பிடும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்குத் தமிழ் உணர்வாளர்களும் பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சீமான் தனது கடுமையான கண்டனப் பதிவை வெளியிட்டுள்ளார்.
அன்னைத் தமிழைச் சட்டமன்றத்திலேயே அவமதிக்கும் வகையில் அமைச்சர் பேசியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான தமிழ் மொழியின் அறத்தையும் அன்பையும் உணராமல் அமைச்சர் இத்தகைய கருத்தைத் தெரிவித்துள்ளார் என்றும் அவர் சாடியுள்ளார்.
எனவே, அன்னைத் தமிழை அவமதிக்கும் வகையில் பேசிய அமைச்சர் மரியவில்சன், தனது தவறை உணர்ந்து தான் பேசிய அதே சட்டமன்ற அவையிலேயே பகிரங்கமாக மனம்வருந்தி மன்னிப்பு கோர வேண்டும் எனச் சீமான் வலியுறுத்தியுள்ளார். இச்சம்பவம் அரசியல் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
