ராஜ்யசபா எம்பியாகப் பொறுப்பேற்றது முதல் அவை நடவடிக்கைகளில் போதிய அளவில் பங்கேற்காமல் 51 சதவீதம் மட்டுமே வருகைப்பதிவு வைத்திருந்ததற்காக நடிகர் கமல்ஹாசன் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தார். முக்கிய விவாதங்களில் பங்கேற்பதில்லை என்றும், அவைக்கு அதிகமாக மட்டம் போடுகிறார் என்றும் சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பலத்தரப்பட்ட விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முதல்முறையாக கமல்ஹாசன் நேரில் வருகை தந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், நேற்று அவை நடவடிக்கைகளில் கலந்துகொண்ட அவர், ஒரே நாளில் சரமாரியாக 7 கேள்விகளை எழுப்பி அவையை அதிர வைத்துள்ளார்.
இதன்மூலம், ராஜ்யசபா எம்பியாக தனது கேள்விகளின் மொத்த எண்ணிக்கையை ஒரே நாளில் 8 ஆக உயர்த்திக் கொண்டுள்ளார் கமல்ஹாசன். வருகைப்பதிவு குறைவாக இருக்கிறது என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த விமர்சகர்களுக்கு, ஒரே நாளில் 7 கேள்விகளை எழுப்பியதன் மூலம் அவர் தனது பதிலைச் செயலில் சுட்டிக்காட்டியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
முக்கியமான பொதுப் பிரச்சனைகள் குறித்து அவர் எழுப்பிய இந்த கேள்விகள் நாடாளுமன்றத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன. எது எப்படியோ, விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும் அவைக்கு வருகை தந்து மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்துள்ள நம்மவர் கமல்ஹாசனின் இந்த நகர்வுக்குப் பலரும் “சபாஷ்” எனப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
