வீட்டு வாசலுக்குப் பார்சல் அல்லது உணவு டெலிவரி செய்ய வரும் நபர்களிடம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலான அதிர்ச்சி சம்பவம் ஒன்றின் சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட பொருளை டெலிவரி செய்ய வந்த ஏஜென்ட் ஒருவர், வீட்டின் வாசலில் நின்றுகொண்டிருந்த சிறுமியிடம் பார்சலைக் கொடுக்கிறார்.
View this post on Instagram
அப்போது, “பொருளை டெலிவரி செய்ததற்கான சான்றாகத் தெளிவாகப் படம் எடுக்க வேண்டும்” என்று சாக்குப்போக்குக் கூறிக்கொண்டே, அந்த நபர் மெதுவாக வீட்டின் எல்லைக்குள்ளேயே கால் எடுத்து வைத்து உள்ளே நுழைய முயல்கிறார். இதைக் கதவின் பின்னால் இருந்து கவனித்துக் கொண்டிருந்த அச்சிறுமியின் தாய், நொடிப் பொழுதில் சமயோசிதமாகச் செயல்பட்டு உடனடியாக வெளியே வந்து அந்த நபரைத் தடுத்து நிறுத்துகிறார்.
தாயின் இந்த அதிரடி மற்றும் உஷாரான நடவடிக்கையைப் பார்த்ததும், அந்த டெலிவரி ஏஜென்ட் மேற்கொண்டு உள்ளே வர முடியாமல் அங்கிருந்து பின்வாங்கிச் செல்கிறார்.
இந்த முழுச் சம்பவமும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, இணையத்தில் பரவியதையடுத்து, அந்தத் தாயின் துரிதமான செயல்பாட்டை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அதே வேளையில், வீடுகளில் தனியாக இருக்கும் சிறுமிகள் மற்றும் பெண்கள் இது போன்ற ஆபத்துகளில் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
