ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பழமையான பாரம்பரிய மாளிகையில் நள்ளிரவில் தோண்டப்பட்ட போது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கக் கலசங்களும் வெள்ளியும் புதையலாகக் கிடைத்துள்ளதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தங்கப் புதையலை வீட்டின் உரிமையாளருக்குத் தெரியாமல் ரகசியமாக அமுக்கியதாகக் கூறி, கட்டுமான ஒப்பந்ததாரர் மீது போலீஸார் அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற திரிபோலியா பஜார் பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரிய மாளிகை ஒன்று உள்ளது. இந்த மாளிகையைப் புதுப்பிக்கும் பணிக்காக ஒரு கட்டுமான ஒப்பந்ததாரரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதன்படி மாளிகையின் உட்பகுதியில் தோண்டும் பணிகள் நடந்து வந்த நிலையில், திடீரென பூமிக்கு அடியில் இருந்து பழங்காலப் புதையல் ஒன்று கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அங்கு வேலை பார்த்தவர்கள் கொடுத்த தகவலின்படி, அந்தப் புதையலில் சுமார் 15 தங்கக் கலசங்களும், 45 கிலோ எடையுள்ள வெள்ளிக் கட்டிகளும் இருந்ததாகத் தெரிகிறது. ஆனால், இந்த விபரம் வீட்டின் உரிமையாளருக்குத் தெரிவிக்கப்படவில்லை. புதையல் கிடைத்ததை ரகசியமாக வைத்திருந்த ஒப்பந்ததாரர், நள்ளிரவோடு நள்ளிரவாக அந்தப் புதையல் முழுவதையும் கடத்தி, வேறு இடத்திற்கு மாற்றிவிட்டதாக வீட்டின் உரிமையாளர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்த வீடியோ ஆதாரங்களுடன் வீட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பல கோடி மதிப்புள்ள இந்தப் புதையல் எங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளது? இதன் பின்னணியில் இருக்கும் பழைய வரலாறு என்ன? என்பது குறித்து போலீஸார் வீடியோ ஆதாரங்களை ஆய்வு செய்து மர்ம முடிச்சுகளை அவிழ்க்கத் தொடங்கியுள்ளனர்.