மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து விமர்சனம் செய்த திமுக எம்.பி. கனிமொழிக்கு, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை புள்ளிவிவரங்களுடன் பதிலடி கொடுத்துள்ளார். தமிழக அரசு நிலம் வழங்காததே திட்டங்கள் தாமதமாவதற்குக் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய பட்ஜெட் குறித்து கனிமொழி எம்.பி. வெளியிட்டிருந்த சமூக வலைதளப் பதிவில், “நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் தமிழகத்திற்கு, மகாராஷ்டிர மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பாஜகவுக்குத் தமிழக மக்களின் வாக்குகள் மட்டுமே தேவை; அவர்களின் வளர்ச்சியில் அக்கறை இல்லை” எனச் சாடியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தற்போது ரூ.35,701 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆனால், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நிலம் கையகப்படுத்திக் கொடுக்காததால் இத்திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன. ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான 4,326 ஹெக்டேர் நிலத்தில், இதுவரை வெறும் 24 சதவீத நிலத்தை மட்டுமே தமிழக அரசு கையகப்படுத்தியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாகப் போதுமான நிலம் வழங்கப்படாததால் ஏராளமான ரயில்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் கிடப்பில் உள்ளன.”உண்மை நிலவரம் தெரியாமல் கனிமொழி எம்.பி. பேசி வருகிறார். பொய்களைப் பரப்புவதை விடுத்து, திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் தனது சகோதரரிடமே (முதல்வர் ஸ்டாலின்), நிலம் கையகப்படுத்துவதில் ஏன் இவ்வளவு தாமதம் என்று கனிமொழி கேள்வி கேட்க வேண்டும்” என அண்ணாமலை தனது அறிக்கையில் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.