தமிழகத்தில் நடந்து வரும் குற்றச் சம்பவங்களை முன்வைத்து, அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி (IT Wing) தங்களது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளது. மூதாட்டி கொலை வழக்கு, இளம்பெண் சடலமாக மீட்பு மற்றும் வாலிபர்களுக்கு அரிவாள் வெட்டு போன்ற சம்பவங்களைப் பட்டியலிட்டுள்ள அதிமுக, “பக்கம் பக்கமாக வசனத்தை மனப்பாடம் செய்து ஒப்பித்து ஆட்சியைப் பிடித்த இந்த ‘பொய்க்கால் குதிரை’ அரசின் முதல்வருக்குச் சட்டம் ஒழுங்கு என்றால் என்னவென்றாவது தெரியுமா?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மீதோ, காவல்துறை மீதோ துளிகூட பயமில்லை என்றும், தவெக அரசு ‘சைலண்ட் மோடில்’ வேடிக்கை பார்ப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வெறும் பிஆர் (PR) பில்டப்களால் மட்டும் ஒரு மாநிலத்தை ஆள முடியாது என்று குறிப்பிட்டுள்ள அதிமுக, “ஆக்டர் விஜய் சார்… பிஆர் பில்டப் எல்லாம் போதும், முதல்ல தமிழ்நாட்டையும், உங்களை நம்பி ஓட்டுப் போட்ட மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க” என்று நேரடியாக முதலமைச்சர் விஜய்யைச் சாடியுள்ளது. இந்த விவகாரம் தற்போது சோஷியல் மீடியாவில் தவெக – அதிமுக தொண்டர்களிடையே கடுமையான விவாதப் பொருளாக மாறியுள்ளது.
