தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், திருப்பத்தூரில் அரசுப் பள்ளி மாணவிகள் சிலர் ‘நட்பை நிரூபிப்பதாகக்’ கூறி, கொதிக்கும் தேநீரைக் கைகளில் ஊற்றிக்கொண்டு வீடியோ வெளியிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களின் தாக்கத்தால் நிகழும் இத்தகைய ஆபத்தான செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் எனப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி தொடங்கிய பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் வரும் 26-ஆம் தேதியுடன் நிறைவடைகின்றன. இந்நிலையில், ஒரு சில பாடப்பிரிவு மாணவர்களுக்கான தேர்வுகள் நேற்றுடன் முடிவடைந்தது. தேர்வு முடிந்த மகிழ்ச்சியில் மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
முன்பெல்லாம் தேர்வு முடிந்ததும் வண்ணப் பொடிகளைத் தூவியும், பேனா மையைப் பூசியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கமாக இருந்தது. ஆனால், தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் போன்ற தளங்களில் வைரலாகும் ஆபத்தான சவால்களை பின்பற்றும் போக்கு மாணவர்களிடையே அதிகரித்துள்ளது.
அந்த வகையில் திருப்பத்தூர் மீனாட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவிகள் சிலர், அருகில் உள்ள தேநீர்க்கடைக்குச் சென்றுள்ளனர். அங்கு கொதிக்கும் தேநீரை வாங்கிய அவர்கள், “எவ்வளவு துன்பம் வந்தாலும் நம் நட்பு பிரியக்கூடாது” எனக் கூறி, இருவர் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டனர். பின்னர், கொதிக்கும் தேநீரைத் தங்களது கைகளின் மீது ஊற்றிக் கொண்டனர்.
வெப்பம் தாங்க முடியாமல் மாணவிகள் அலறிய நிலையிலும், கைகளைப் பிரிக்காமல் அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகிப் பார்ப்போரை உறைய வைத்துள்ளது. இத்தகைய ஆபத்தான கலாச்சாரம் தற்போது தமிழக மாணவர்களிடையேயும் ஊடுருவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிகளின் இத்தகைய அறிவற்ற செயலைக் கண்டித்துள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள், “தேர்வு முடிந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தப் பல வழிகள் இருக்கும்போது, உடலை வருத்திக்கொள்ளும் இத்தகைய ஆபத்தான செயல்களை அனுமதிக்கக்கூடாது. ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர்.
