கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கும் வேளையில், இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தைப் போதிக்கக் கூடாது என்று பாதிரியார் ஒருவருக்குப் பகிரங்கமாக மிரட்டல் விடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் இருக்கும் நபர், “இந்தியாவில் பைபிளால் என்ன பயன்? நீங்கள் பைபிளைப் பின்பற்றக் கூடாது” என்று ஆக்ரோஷமாகப் பாதிரியாரைத் தடுத்து நிறுத்தி அச்சுறுத்துகிறார். இந்தச் சம்பவம் மதச் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாகப் பார்க்கப்படுகிறது.



இந்த வீடியோ எக்ஸ் (X) வலைத்தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து, இந்தியாவின் தலித் மக்கள் மற்றும் சிறுபான்மையினர் நடத்தப்படும் விதம் குறித்து சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகள் சபையும் (UN) கவனிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. “வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாட்டில் ஒரு மதத்தைப் பின்பற்ற இவ்வளவு அச்சுறுத்தல்களா?” என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மத நல்லிணக்கத்தைச் சிதைக்கும் வகையில் அத்துமீறி மிரட்டல் விடுத்த அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.