ஐபிஎல் போட்டிகளின் பரபரப்புக்கு மத்தியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனும், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளருமான கம்மின்ஸ், பாலிவுட் திரை உலக நட்சத்திரமான ஜான்வி கபூருடன் இணைந்து  நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். ஹைதராபாத்தில் உள்ள பிரபல டிஎல்எஃப் (DLF) வணிக வளாகத்தில் நடைபெற்ற இந்த விளம்பரத் தூதுவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில், இருவருக்குமிடையே ஒரு சுவாரசியமான கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக ஆடுகளத்தில், கம்மின்ஸ் பந்து வீச, ஜான்வி கபூர் பேட்டிங் செய்யத் தயாரானார். கிரிக்கெட் மற்றும் சினிமா உலகின் இந்த அரிய கலவையைக் காண மாலில் பெருமளவிலான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

அப்போது பேட் கம்மின்ஸ் வீசிய பந்தை, ஜான்வி கபூர் மிகவும் ஆக்ரோஷமாக எதிர்கொண்டு, பாய்ந்து வந்து ஒரு சிக்சர் அடித்தார். அவர் அடித்த பந்து நேராக அரங்கில் கூடியிருந்த ரசிகர்களின் கூட்டத்தை நோக்கிப் பாய்ந்தது. எதிர்பாராத விதமாக, அந்தப் பந்து அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு ரசிகரின் கண்ணிற்கு அருகில் பலமாகத் தாக்கியதுடன், அவர் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்த மொபைல் போன் மீதும் மோதியது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் திடீரென பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரசிகரின் மொபைலில் பந்து மோதும் இந்தத் துல்லியமான காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.

 

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பந்து தாக்கிய ரசிகரிடம் நடிகை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாகப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என்னுடைய ஷாட் மூலம் யாருடைய கண்ணில் பந்து பட்டதோ, அதற்கு நான் மனமார்ந்த மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்; நான் இன்னும் கிரிக்கெட் விளையாட்டில் எனது சமநிலையைக் கண்டறிய போராடி வருகிறேன் என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட் நட்சத்திரமும், பாலிவுட் நடிகையும் இணைந்து நடத்திய இந்த விளையாட்டு, இறுதியில் ரசிகர் மீது பந்து தாக்கிய சோகத்துடன் முடிந்தாலும், சமூக வலைத்தளங்களில் இந்தத் தருணம் தற்போதைய ட்ரெண்டிங்காக மாறியுள்ளது.