டெங்குவில் இருந்து குணமடைந்த சுப்மன் கில் பேட்டிங் பயிற்சியை தொடங்கினார்.

ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இன் முக்கியமான ஆட்டம் இந்தியா-பாகிஸ்தான் இடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இரு அணிகளும் அகமதாபாத் சென்றடைந்தன. டீம் இந்தியாவின் பக்கம் ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. என்னவென்றால் இன்-ஃபார்ம் பேட்ஸ்மேன் சுப்மன் கில் வலை பயிற்சி செய்வதைக் காண முடிந்தது. டெங்கு காரணமாக சுப்மன் கில் அணியில் இருந்து வெளியேறியதால், ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் நடைபெற்ற இந்தியாவின் முதல் 2 போட்டிகளிலும் விளையாட முடியவில்லை.

பாகிஸ்தானுக்கு எதிரான அணியில் சுப்மன் கில் இடம் பெறுவாரா?

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் அணியில் இடம் பெறுவாரா என்பது அனைவரது மனதில் உள்ள கேள்வி. கில் களமிறங்குவார் என நிச்சயமாக எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இதுவரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து (பிசிசிஐ) அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை.

நேற்று வியாழன் காலை 11:30 மணியளவில் வலைகளுக்குச் செல்வதற்கு முன்பு சுப்மன் கில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அவருடன் இந்திய அணியின் பிசியோ கமலேஷ் மற்றும் த்ரோ டவுன் நிபுணர் நுவான் செனவிரத்ன ஆகியோரும் உடன் இருந்தனர்.

மொட்டேரா வலைகளில் கில் சுமார் ஒரு மணி நேரம் பேட்டிங் செய்தார். அவர் த்ரோடவுன்கள் மற்றும் சில வலைப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டார் மற்றும் உடல் ரீதியாக எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. பின்னர், கில் கேட்சிங் பயிற்சி செய்தார்.

அகமதாபாத்தில் பாகிஸ்தான் அணிக்கு பிரமாண்ட வரவேற்பு :

முன்னதாக, பாகிஸ்தான் அணி புதன்கிழமை அகமதாபாத் சென்றடைந்தது. இங்கு அணியினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹோட்டலை அடைந்தவுடன், அவர்களுக்கு கேக், பூக்கள் மற்றும் நடனத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுவரை பாகிஸ்தான் அணி ஹைதராபாத்தில் தங்கியிருந்தது. அவர்களது இரண்டு போட்டிகளும் இங்கு நடந்தன. இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களது முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் ஹாட்ரிக் வெற்றி பெற இரு அணிகளும் மல்லுகட்டும் என்பதில் சந்தேகமில்லை..