அக்டோபர் 14 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியின் போதும், நவராத்திரி பண்டிகையின் போதும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.

2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் 12வது போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக பாகிஸ்தான் மற்றும் இந்திய அணி அகமதாபாத்தை அடைந்து தனது பயிற்சியை தொடங்கியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் இந்த மாபெரும் போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும், ரசிகர்களுக்கு கவலையளிக்க கூடிய செய்தி வெளியாகியுள்ளது. ஏனெனில் இந்த முறை இந்தியாவும் பாகிஸ்தானும் உலகக் கோப்பையில் நேருக்கு நேர் மோதும் போது, ​​​​அந்தப் போட்டியில் மழை வில்லனாக மாறக்கூடும். இந்தியா – பாகிஸ்தான் இடையே அக்டோபர் 14-ம் தேதி நடைபெற உள்ள போட்டியின் போது லேசான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

முதலில் அக்டோபர் 15-ம் தேதி போட்டி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அதே நாளில் நவராத்திரி விழா தொடங்குவதால் போதிய பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என அகமதாபாத் காவல்துறை தெரிவித்துள்ளது. இதனால் போட்டி ஒரு நாள் முன்னதாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால், தற்போது மழை பெய்யும் என்ற முன்னறிவிப்பு காரணமாக ஏற்பாட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர். நரேந்திர மோடி மைதானத்தின் அவுட்பீல்டு குறித்து ஏற்கனவே கேள்விகள் எழுந்துள்ளன. மழை பெய்தால், மைதானம் மேலும் மோசமடையும். இந்த மைதானத்தின் வடிகால் அமைப்பும் அமைப்பாளர்களுக்கு ஒரு கவலையாக இருக்கலாம்.

உலகக் கோப்பையின் இந்த கண்கவர் ஆட்டம் மோட்டேராவில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சனிக்கிழமை நடைபெறும் அதே நேரத்தில் 9 நாள் நவராத்திரி விழா அக்டோபர் 15 ஆம் தேதி தொடங்கும். இந்திய வானிலை ஆய்வுத் துறை பகிர்ந்துள்ள சமீபத்திய வானிலை தகவல்களின்படி, அக்டோபர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் வடக்கு குஜராத் மற்றும் அகமதாபாத் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

இதுகுறித்து அகமதாபாத்தின் வானிலை ஆய்வு மைய இயக்குநர் மனோரமா மொஹந்தி கூறுகையில், “அடுத்த 5 நாட்களில் குஜராத்தில் வறண்ட வானிலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அக்டோபர் 14 ஆம் தேதி அகமதாபாத் மாவட்டத்தில் லேசான மழை பெய்யக்கூடும்” என்றார். அவர், வடக்கு குஜராத் மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களிலும், அகமதாபாத்திலும் அக்டோபர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

“குஜராத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வானிலை வறண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அக்டோபர் 14 அன்று அகமதாபாத் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வளிமண்டலம் மேகமூட்டத்துடன் இருக்கும். அடுத்த நாள், அகமதாபாத் மற்றும் பனஸ்கந்தா, சபர்கந்தா மற்றும் அர்வல்லி போன்ற பிற வட மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்” என்று அகமதாபாத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் மனோரமா மொஹந்தியை மேற்கோள் காட்டி பிடிஐ தெரிவித்துள்ளது.

அக்டோபர் 16 ஆம் தேதி பனஸ்கந்தா மற்றும் சபர்கந்தா மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று அவர் மேலும் கூறினார், அஹமதாபாத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் வாய்ப்பை நிராகரிக்க முடியாது என்றும் கூறினார்.  

உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியுள்ளது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவையும், இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தியது. மறுபுறம், பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தியது. அதேசமயம் இரண்டாவது போட்டியில் பாபர் அண்ட் கோ இலங்கையை வீழ்த்தியது. இரு அணிகளுமே 2 தொடர் வெற்றிகளை பெற்றுள்ள நிலையில், ஹாட்ரிக் வெற்றி யாருக்கு என்பதில் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.. ஒரு வேளை மழை பெய்து ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டால் நிச்சயம் ரசிகர்கள் கவலையடைவார்கள்..