இந்தியாவில் நடைபெற்று வரும் 19-வது ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டு வருகிறார். சென்னை அணி விளையாடிய முதல் 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளதால், கெய்க்வாட்டின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ரன்குவிக்க தடுமாறி வரும் அவர், இக்கட்டான இந்தச் சூழலை எப்படி கையாளுகிறார் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பின்போது “உங்களுக்கு பேட்டிங்கில் அழுத்தமா அல்லது கேப்டன்சியில் அழுத்தமா?” என்று கெய்க்வாட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு யாரும் எதிர்பாராத விதமாகச் சிரித்துக்கொண்டே பதிலளித்த அவர், தனக்கு பேட்டிங் அல்லது கேப்டன்சியை விட ‘டாஸ்’ போடுவதுதான் அதிக அழுத்தத்தைக் கொடுப்பதாக ஜாலியாகக் கூறினார். இக்கட்டான நிலையிலும் எவ்வித பதற்றமும் இல்லாமல் அவர் அளித்த இந்தப் பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
