கவுகாத்தியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி நிர்ணயித்த 202 ரன்கள் என்ற கடினமான இலக்கை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18 ஓவர்களிலேயே எட்டி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் நாயகனாகத் திகழ்ந்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, வெறும் 26 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 78 ரன்கள் குவித்து அதிரடி காட்டினார்.
குறிப்பாக, 15 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், ஐபிஎல் வரலாற்றில் ஒரு இந்திய வீரரின் மூன்றாவது அதிவேக அரைசதம் என்ற சாதனையை மீண்டும் ஒருமுறை நிகழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இந்தத் தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள வைபவ், 266 என்ற அசாத்தியமான ஸ்ட்ரைக் ரேட்டில் 200 ரன்களைக் குவித்து ரன் வேட்டையாடி வருகிறார்.
பவர்பிளே ஓவர்களில் அதிக அரைசதங்கள் அடித்த ஜோஸ் பட்லரின் சாதனையை சமன் செய்துள்ள அவர், இந்த சீசனில் இதுவரை 18 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மிகக் குறைந்த பந்துகளில் அதிக முறை அரைசதம் அடித்த டிராவிஸ் ஹெட் மற்றும் மெக்குர்க்கின் சாதனையையும் தற்போது வைபவ் சமன் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
