தனது தாய் மற்றும் பாட்டியின் அந்தரங்கப் புகைப்படங்களை ரகசியமாக எடுத்து காதலனுக்கு அனுப்பிய புகாரில், கல்லூரி மாணவி மற்றும் அவரது காதலன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதாவது பெங்களூருவை சேர்ந்த சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், அவரது மூத்த மகள் மற்றும் காதலன் வருண் ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் கல்லூரியில் பிபிஎம் (BBM) பயின்று வரும் அந்த மாணவிக்கு, கடந்த ஆண்டு படிப்பு தேவைக்காக மொபைல் போன் வாங்கித் தரப்பட்டது.
சமீபத்தில் அந்த மாணவி அறிமுகமில்லாத இளைஞர் ஒருவருடன் அடிக்கடி பேசி வந்ததைக் கண்ட தாய், மகளின் மொபைல் போனைச் சோதனையிட்டார். அப்போது, தனது அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் தனது தாயின் (மாணவியின் பாட்டி) புகைப்படங்கள் அந்த இளைஞருக்கு அனுப்பப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அந்த இளைஞர், “உன் தாயின் அந்தரங்கப் படங்களை எனக்கு அனுப்பு” என்று குறுஞ்செய்தி மூலம் வற்புறுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து மாணவியைக் கண்டித்த நிலையில், அவர் தனது காதலன் வருணைத் தான் திருமணம் செய்வேன் எனக்கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அந்தப் புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில் தாய் அளித்த புகாரின் பேரில் போலீஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
