ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே ஆக்கிடாவலசை கிராமத்தில் நடந்த இந்த சோகமான சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி என்பவர் மூன்று மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி ஜானகி கணவர் இழந்த துக்கம் தாளாமல் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த துயரத்தின் உச்சமாக, ஜானகி நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வேலை முடிந்து வீடு திரும்பிய அவரது மகன்கள் அருள்ராஜ் மற்றும் தினேஷ், தாய் பிணமாகத் தொங்குவதைக் கண்டு நிலைகுலைந்து போனார்கள்.

மேலும் தந்தையைத் தொடர்ந்து தாயையும் பறிகொடுத்த வேதனையைத் தாங்க முடியாமல், ஜானகியின் இரண்டாவது மகன் தினேஷ் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். பெற்றோரை இழந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத தினேஷ், நேற்று அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்திற்குச் சென்று, ராமேசுவரத்திலிருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

இந்நிலையில் ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த மூன்று மரணங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.