கர்நாடக மாநிலம் மைசூருவில், 3-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரின் பள்ளிப் பைக்குள் 2.5 அடி நீளமுள்ள விஷப் பாம்பு ஒன்று புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மைசூருவைச் சேர்ந்த ருசிதா என்ற சிறுமி பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும், தனது புத்தகப் பையைத் திறக்க முயன்றுள்ளார். அப்போது பைக்குள் ஏதோ ஒன்று நகருவதை உணர்ந்த அவர், உடனடியாகப் பையைத் தூக்கி எறிந்துவிட்டுப் பெற்றோரிடம் கூறியுள்ளார். அந்தச் சிறுமியின் சமயோசித புத்தியால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

​தகவலறிந்த பிரபல பாம்பு பிடி வீரர் ‘ஸ்நேக் ஷியாம்’ உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்தார். 49 ஆண்டுகால அனுபவம் கொண்ட அவர், சிறுமியின் பையைத் திறந்து பார்த்தபோது, பாடப்புத்தகங்களுக்கு நடுவே ஒரு விஷப் பாம்பு சுருண்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். மிகவும் ஜாக்கிரதையாக அந்தப் பாம்பைப் பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று அவர் விட்டார்.

“வெயில் காலம் தொடங்கிவிட்டதால், குளிர்ச்சியான இடத்தைத் தேடிப் பாம்புகள் இப்படிப் பைகளுக்குள் புகுந்துவிடும். விளையாட்டு மைதானத்திலோ அல்லது புல்வெளிகளிலோ பையை வைக்கும்போது ஜிப்பை சரியாக மூட வேண்டும்” எனப் பெற்றோருக்கு அவர் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.