கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், விளையாடிக் கொண்டிருந்தபோது தொண்டையில் கல் சிக்கி ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலப்புரம் மாவட்டம்  தெக்குமூரி பகுதியைச் சேர்ந்தவர் மஹ்ரூப். இவரது மனைவி ருமானா. இவர்களது ஒரு வயது மகன் அஸ்லம் நூஹ். குழந்தை நேற்று வீட்டின் கொல்லைப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, தவறுதலாக மண்ணை விழுங்கியதாக கூறப்படுகிறது. மண்ணில் இருந்த சிறிய கற்கள் குழந்தையின் தொண்டையில் சிக்கியதால், மூச்சு விடுவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, குடும்பத்தினர் உடனடியாக குழந்தையை சங்கரம்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு குழந்தையின் உடல்நிலை மேலும் மோசமானதால், சிறப்பு சிகிச்சைக்காக கொட்டக்கலையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டான். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தது.
தொண்டையில் கல் சிக்கியதால் ஏற்பட்ட கடுமையான சுவாசக் கோளாறுதான் மரணத்திற்குக் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இது மூச்சுத்திணறலால் ஏற்பட்ட மரணம் என்பதால், வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என சங்கரம்குளம் போலீசார் கூறினர்.
தேவையான நடைமுறைகள் முடிக்கப்பட்ட பின்னர், குழந்தையின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.