ஒடிசா மாநிலம் தியோகர் மாவட்டத்தில், பெற்றோர் எடுத்த விபரீத முடிவால் ஐந்து வயது சிறுவன் ஒருவன் காட்டில் தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜியானந்தபள்ளி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர், கடந்த 27-ம் தேதி மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும்போது ஏற்பட்ட தகராறில், அடர்ந்த காட்டுக்குள் சென்று விஷம் குடித்துள்ளனர். அவர்களுடன் தங்கள் 5 வயது மகனுக்கும் விஷம் கொடுத்துள்ளனர். இதில் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, தாய் மயக்கமடைந்தார். ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அந்தச் சிறுவன், அந்த அடர்ந்த காட்டில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், இரவு முழுவதும் தன் தந்தையின் சடலத்திற்கும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தாய்க்கும் காவல் இருந்துள்ளான்.

​மறுநாள் காலை, அந்தச் சிறுவன் அழுதுகொண்டே சாலைக்கு வந்து அங்கிருந்த வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டுள்ளான். சிறுவன் அழைத்துச் சென்ற இடத்திற்குச் சென்ற மக்கள், தந்தை இறந்து கிடப்பதையும் தாய் உயிருக்கு போராடுவதையும் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் தாயை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தும் பலனின்றி அவரும் உயிரிழந்தார். நெஞ்சைப் பதறவைக்கும் இந்தச் சம்பவத்தில் பெற்றோரை இழந்த அந்தச் சிறுவன், தற்போது அவனது தாத்தா-பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.