ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா பகுதியைச் சேர்ந்த 26 வயது இளைஞர், நீண்ட நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட ஸ்கேன் பரிசோதனையில், அந்த இளைஞரின் வயிற்றுக்குள் இரும்பு ஸ்பேனர் மற்றும் டூத் பிரஷ்கள் இருப்பது கண்டறியப்பட்டு அதிர்ச்சி ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மருத்துவர்கள் அவசரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற அறுவைச் சிகிச்சையில், இளைஞரின் வயிற்றிலிருந்து 2 இரும்பு ஸ்பேனர்கள் மற்றும் 7 டூத் பிரஷ்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டன.
அறுவைச் சிகிச்சைக்கு பிறகு அந்த இளைஞர் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் மனரீதியாக பாதிக்கப்பட்டவர் என்பதும், அதனால் இத்தகைய பொருட்களை விழுங்கியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
