பிரபல நடிகர் ஆர். மாதவன், லடாக்கின் லே பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் சிக்கியுள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், “2008-ஆம் ஆண்டு ‘3 இடியட்ஸ்’ படப்பிடிப்பின் போது பனிப்பொழிவில் சிக்கியிருந்தேன்.
இப்போது 17 ஆண்டுகள் கழித்து, மீண்டும் லேயில் கனமழை மற்றும் வெள்ளத்தால் சிக்கியுள்ளேன். விரைவில் வீடு திரும்புவேன் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் வெளிவந்ததும், அவரது ரசிகர்கள் அச்சம் வெளியிட்டு, அவரின் பாதுகாப்புக்காக பிரார்த்தித்து வருகின்றனர்.
ஜம்மு & காஷ்மீர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய மழை, வெள்ளப்பெருக்கு கடுமையாகப் பதிவாகி வருகிறது. அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளனர். பல வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, சாலைகள் மற்றும் பாலங்கள் உட்பட அடிப்படை வசதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நடிகர் மாதவன் பகிர்ந்த தகவல், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்ததோடு, அப்பகுதியின் வெள்ள நிலைமை குறித்து கவலைகளை அதிகரித்துள்ளது.
