பிரேசிலின் ரியோ டோ சுல் நகரில் உள்ள ஆல்டோ வேல் மருத்துவமனையில், சிடி ஸ்கேன் சோதனையின்போது பயன்படுத்தப்பட்ட கான்ட்ராஸ்ட் மருந்துக்கு ஒவ்வாமை ஏற்பட்டு, 22 வயது வழக்கறிஞர் லெடிசியா பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 20 அன்று, சிறுநீரக கற்கள் காரணமாக வழக்கமான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட லெடிசியா, அனாபிலாக்டிக் ஷாக் எனும் கடுமையான ஒவ்வாமை எதிர்வினைக்கு ஆளாகி, மருத்துவர்கள் குழாய் மூலம் சுவாச உதவி அளித்து மீட்க முயன்ற போதிலும், ஒரு நாளுக்குள் உயிரிழந்தார்.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவத்தின் கூற்றுப்படி, அனாபிலாக்டிக் ஷாக் என்பது திடீர் மற்றும் உயிருக்கு ஆபத்தான ஒவ்வாமை எதிர்வினையாகும், இதில் மூச்சுத்திணறல், தொண்டை வீக்கம், ரத்த அழுத்தம் குறைவு போன்ற அறிகுறிகள் தோன்றும்.

லெடிசியா, பிரேசிலின் லோன்ட்ராஸ் நகரைச் சேர்ந்தவர். சட்டப்படிப்பை முடித்து, சட்டம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் முதுகலைப் பட்டப்படிப்பு பயின்று வந்தார். அவரது அத்தை சாண்ட்ரா பால், G1 ஊடகத்திடம், “லெடிசியா ஆர்வமும் தனித்தன்மையும் நிறைந்தவர். சட்டத்தை உயிராக நேசித்து, கனவுகளுடன் படித்து வந்தவர்.

அவர் சட்டத்துறையில் பெரிய பெயர் பெற்றிருப்பார் என நம்புகிறேன்,” என கண்ணீருடன் கூறினார். ஆல்டோ வேல் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “நாங்கள் மருத்துவ நெறிமுறைகளை பின்பற்றி, வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றுகிறோம். இதுபோன்ற பாதகமான எதிர்வினைகள் மிக அரிது,” என தெரிவித்தது.

தேசிய மருத்துவ நூலகத்தின் தகவல்படி, சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ பரிசோதனைகளில் பயன்படுத்தப்படும் கான்ட்ராஸ்ட் மருந்து பொதுவாக பாதுகாப்பானது என்றாலும், 5,000 முதல் 10,000 நோயாளிகளில் ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான எதிர்வினைகள் ஏற்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.