சென்னை பெரம்பூர் இரயில் நிலையத்தில் சூட்கேசில் துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்ட வழக்கில், அறிவியல் பூர்வமான விசாரணையின் மூலம் ஒரே நாளில் துப்பு துலக்கிய இரயில்வே போலீசார், கொலையாளிகளான உயிரிழந்தவரின் மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரைக் கைது செய்துள்ளனர்.

கடந்த 5-ஆம் தேதி காலை 8 மணியளவில், சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடி, அரக்கோணம் செல்லும் மின்சார இரயில்கள் நின்று செல்லும் பெரம்பூர் இரயில் நிலையத்தின் 4-ஆவது நடைமேடையில், ஜமாலியா பகுதிக்குச் செல்லும் படிக்கட்டு அருகே நீல நிற டிராலி சூட்கேஸ் ஒன்று நீண்ட நேரமாகக் கேட்பாரற்றுக் கிடந்தது.

அங்கிருந்த பயணிகள் கொடுத்த தகவலின்படி, பாதுகாப்புப் பணியில் இருந்த இரயில்வே போலீசார் அந்த சூட்கேசை ஓரமாக எடுத்து வைக்க முயன்றனர். அப்போது, அது வழக்கத்திற்கு மாறாக அதிக எடையுடன் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார் அதனைத் திறந்து பார்த்தனர்.
சூட்கேசிற்குள் தலை, கை மற்றும் கால்கள் முழங்கால் வரை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவரின் உடல், சிவப்பு நிற பாலிதீன் பையிலும் சாக்குமூட்டையிலும் கட்டப்பட்டுக் கொடூரமான முறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது.

ரத்தம் உறைந்து, உடல் சற்று அழுகிய நிலையில் காணப்பட்ட இந்தச் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், தீவிர விசாரணையைத் தொடங்கினர். விசாரணை குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த வழக்கு எங்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது. இரயில் நிலைய கேமராக்கள் சரியாக இயங்காததால், நிலையத்திற்கு வெளியே இருந்த 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தோம். அதில், ஒரு வாடகை ஆட்டோவில் இருந்து இறங்கிய ஒரு ஆணும், பெண்ணும் இந்த நீல நிற சூட்கேசை இரயில் நிலையம் நோக்கி இழுத்து வந்த காட்சிப் பதிவாகியிருந்தது. இதன் மூலம் கொலையில் இருவருக்குத் தொடர்பிருப்பது உறுதியானது,” என்றார்.

சடலத்தின் உடம்பில் இருந்த ஒரு டிரவுசரில் (Trouser) ஒரு குறிப்பிட்ட எண் இருந்தது. அதை வைத்து, அந்த ஆடை எந்தக் கடையில் வாங்கப்பட்டது என்று போலீசார் விசாரித்தனர். அந்த ஜவுளிக்கடையில் விசாரித்த போது, குறிப்பிட்ட அந்த ஆடையை அமீர் அலி மற்றும் ரோஹிமா ஆகிய இருவர் வாங்கிச் சென்றதும், அவர்கள் பில் போடுவதற்காகக் கொடுத்த இரண்டு செல்போன் எண்களையும் கடைக்காரர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் அந்த எண்களைக் கண்காணித்த போது அவை ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தன. எனினும், அந்த எண்கள் மூலம் அவர்கள் தேனாம்பேட்டை தாமஸ் நகரில் வசிப்பது தெரியவந்தது. மேலும், அந்த எண்ணின் ‘வாட்ஸ்அப்’பில் இருந்த பெண்ணின் புகைப்படத்தை அப்பகுதி மக்களிடம் காட்டி, அவர்தான் ரோஹிமா என்பதை உறுதி செய்தனர். அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது.

இதனையடுத்து, அவரது செல்போன் எண்ணிற்கு மீண்டும் தொடர்பு கொண்ட போலீசார், “நாங்கள் வெளிமாநிலத்தில் இருந்து வந்துள்ளோம், ஆயிரம் விளக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வீடு வாடகைக்குத் தேவைப்படுகிறது” என்று சாதுரியமாகப் பேசினர். அதனை உண்மை என்று நம்பிய ரோஹிமா, அவர்களைத் தியாகராய நகருக்கு வருமாறு கூறினார். அங்கு மறைந்திருந்த போலீசார், ரோஹிமாவைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

ரோஹிமா கொடுத்த தகவலின் அடிப்படையில், அவரது ஆண் நண்பரான அஷ்ரப் அலியையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் அமீர் அலி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதை இருவரும் ஒப்புக் கொண்டனர்.

அவர்களது வாக்குமூலத்தின் அடிப்படையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த அமீர் அலியின் தலை உள்ளிட்ட உடற்பாகங்கள் மற்றும் கொலைக்குப் பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், சடலத்தை ஏற்றி வந்த ஆட்டோ ஓட்டுநரிடமும் விசாரணை நடத்தி, குற்றவாளிகளின் அடையாளத்தை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். கைதான இருவரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.