உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அவுரையா பகுதியில் தேவர் பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு பிரியங்கா என்ற பெண் வசித்து வரும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி 4 குழந்தைகள் இருந்துள்ளனர். இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் ஆஷிஷ் என்ற வாலிபருடன் பிரியங்காவுக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் ரகசிய தொடர்பில் இருந்த நிலையில் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து கள்ளக்காதலை வளர்த்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்த நிலையில் குழந்தைகள் அதற்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதால் நான்கு பேரையும் தீர்த்து கட்ட இருவரும் திட்டம் தீட்டினர்.
அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டு குழந்தைகளை அந்த பகுதியில் உள்ள ஒரு ஆற்றுக்கு அழைத்துச் சென்று நால்வரையும் தண்ணீரில் தள்ளிவிட்டனர். மனசாட்சியே இல்லாமல் பெற்ற குழந்தைகளை ஒவ்வொன்றாக ஆற்றில் தூக்கி பிரியங்கா வீசினார். இதில் 6 வயது குழந்தை மாதவ், 4 வயது குழந்தை ஆதித்யா, 2 வயது குழந்தை மங்கவ் ஆகியோர் உயிரிழந்த நிலையில் 9 வயது மூத்த மகன் சோனுவை மட்டும் கிராம மக்கள் காப்பாற்றிவிட்டனர்.
இது தொடர்பாக பிரியங்காவின் மைத்துனர் புகார் கொடுத்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரியங்கா மற்றும் ஆசிஷ் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி பிரியங்காவுக்கு மரண தண்டனையும் 2.5 லட்சம் அபராதமும், கள்ளக்காதலன் ஆஷிஷுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
