சமூக வலைதளங்களில் லைக்குகளுக்காகவும், பார்வைகளுக்காகவும் மக்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு அதிர்ச்சியூட்டும் காணொளி எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் ரீல்ஸ் எடுப்பதற்காகத் தனது இரண்டு குழந்தைகளையும் கையில் பிடித்துக்கொண்டு, ஒரு பாழடைந்த கிணற்றின் விளிம்பில் ஆபத்தான முறையில் ஏறி நிற்கிறார். அதோடு நிற்காமல், வீடியோவில் சுவாரசியத்தைக் கூட்ட வேண்டும் என்பதற்காக, கையில் இருக்கும் குழந்தைகளைக் கிணற்றுக்குள் தூக்கிப் போடுவது போலப் பாவனை செய்து விளையாடுகிறார்.

​இந்தக் காணொளியைக் கண்ட நெட்டிசன்கள் கடும் கோபத்தில் கொந்தளித்து வருகின்றனர். “ஒரு நொடி பிடி நழுவினாலும் பிஞ்சு உயிர்கள் என்னவாகும்?” என்று ஆவேசமாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு தாயே தன் குழந்தைகளின் உயிரைப் பணையம் வைத்து இப்படி ஒரு முட்டாள்தனமான செயலில் ஈடுபட்டதைக் கண்டிக்காதவர்களே இல்லை எனலாம். இந்தக் காணொளி வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அந்தப் பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.