மும்பையில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய அவரது தந்தையை, டி.என்.ஏ (DNA) பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் காவல்துறை கைது செய்துள்ளது.

இந்த வழக்கில் குற்றவாளியைக் கண்டறிய 16 பேரிடம் டி.என்.ஏ சோதனை நடத்தப்பட்ட நிலையில், 17-வதாகச் செய்யப்பட்ட சோதனையில் சிறுமியின் தந்தையே குற்றவாளி என்பது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உடல் மற்றும் வாய் பேச முடியாத குறைபாடு கொண்ட அச்சிறுமி கர்ப்பமடைந்தது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியால் தனக்கு நேர்ந்த கொடுமையைக் கூற இயலாத நிலையில், குற்றவாளியைக் கண்டறிவது காவல்துறைக்குப் பெரும் சவாலாக இருந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் சிறுமியின் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் என 16 பேரின் டி.என்.ஏ மாதிரிகளைச் சேகரித்து சோதனை செய்தும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இறுதியாக, சிறுமியின் தந்தையிடம் நடத்தப்பட்ட சோதனையில், பிறந்த குழந்தையுடன் அவரது டி.என்.ஏ ஒத்துப் போனது.

இதனையடுத்து, போக்ஸோ (POCSO) சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த மும்பை போலீசார், தந்தையைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடக்கத்தில் வெளியாட்கள் மீது பழியைப் போட்டுத் தப்பிக்க முயன்றவர், அறிவியல் ஆதாரங்களால் தற்போது சிக்கியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தற்போது அரசு காப்பகம் மற்றும் அவரது தாயார் மூலம் மருத்துவ மற்றும் உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

.