மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வருமான வரி நிலுவைத் தொகையை வட்டியுடன் செலுத்தத் தவறினால், அவருக்குச் சொந்தமான சொத்துக்கள் ஏலம் விடப்படும் என்று வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்டுள்ள தீபா மற்றும் தீபக் ஆகியோர், வருமான வரித்துறை அனுப்பிய சுமார் ரூ. 13 கோடி வரி பாக்கி நோட்டீஸை எதிர்த்துத் தொடர்ந்த வழக்கில் இந்த முக்கியத் தகவலைத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா உயிருடன் இருந்த காலகட்டத்தில் செலுத்த வேண்டிய வருமான வரி நிலுவை மற்றும் அதற்கான வட்டித் தொகை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வருகிறது. இது தொடர்பாக வரித்துறை தரப்பில் கூறுகையில், சட்டப்படி அறிவிக்கப்பட்ட வாரிசுகள் என்ற முறையில் தீபாவும், தீபக்கும் இந்த வரி பாக்கியைச் செலுத்தக் கடமைப்பட்டவர்கள் என்றும், காலக்கெடுவுக்குள் தொகை செலுத்தப்படாத பட்சத்தில், வரி மீட்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக முடக்கப்பட்ட சொத்துக்களை ஏலம் விட்டு நிலுவைத் தொகையை ஈடு செய்ய நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நீதிமன்றத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

.