தமிழகத்தில் அதிகரித்து வரும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “பெண் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசு அதில் துளியும் அக்கறை காட்டவில்லை; இந்த அரசு பெண்களின் பாதுகாப்பில் ‘டோட்டல் ஃபெயில்’ மார்க் தான் வாங்கியிருக்கிறது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். முதலமைச்சர் விஜய் இந்த விவகாரத்தில் போர்க்கால நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் அமைத்துள்ள ‘சிங்கப்பெண் படை’ குறித்தும் அவர் கிண்டலாகச் சாடியுள்ளார். “சிங்கப்பெண் படைனு பேர் வச்சுருக்கீங்க, ஆனா இந்த ஓநாய்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா? பெண் குழந்தைகளைத் தொடர்ந்து பலியாகும் ஓநாய்கள் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?” என்று முதலமைச்சரை நோக்கி சரமாரியான கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார். பாலியல் குற்றங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் வேதனை அளிப்பதாகக் கூறிய அவர், இதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்றும் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
