தனது பெயரில் சமூக வலைதளங்களில் நடக்கும் அத்துமீறல்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என திமுக-வில் இணைந்துள்ள ரஞ்சனா நாச்சியார் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய்யின் பழைய பாணியை வைத்தே ஒரு நக்கலான கோரிக்கையை முன்வைத்தார்.
“மரம் ஏறாதீங்க, கீழே இறங்குனாத்தான் முத்தம் கொடுப்பேன் என்று சொல்லும் விஜய் அவர்கள், பெண்களை அசிங்கப்படுத்தாதீர்கள், அப்படிச் செய்யவில்லை என்றால் உங்களுக்கு முத்தம் கொடுப்பேன் என்று ஒரு அறிக்கையாவது விடலாமே?” என அழுத்தமாகக் கேள்வி எழுப்பினார். தன் மீது நடத்தப்படும் ‘டிஜிட்டல் அப்யூஸை’ விஜய் கண்டிக்கத் தவறினால், அது அவரது தலைமைப் பண்பிற்கே (Leadership Quality) ஒரு பெரிய கேள்விக்குறியாக மாறும் என்றும் ரஞ்சனா நாச்சியார் எச்சரித்தார்.
கட்சி மாறுவது ஒருவரின் தனிப்பட்ட உரிமை என்றும், அதற்காக ஒரு பெண்ணின் கேரக்டரை அசிங்கப்படுத்துவதை ஒரு தலைவராக விஜய் வேடிக்கை பார்க்கக் கூடாது என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்தார். இந்த ‘முத்தம்’ குறித்த கிண்டலான விமர்சனம் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
