பரந்தூர் புதிய விமான நிலையம் இல்லாமலேயே தமிழகத்தால் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை எளிதாக எட்ட முடியும் என்று ‘உவகை ஆராய்ச்சி நிறுவனம்’ வெளியிட்டுள்ள புதிய ஆய்வு முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள 6 விமான நிலையங்களின் மொத்த ஆண்டு பயணிகள் கொள்ளளவு 5.11 கோடியாக உள்ள நிலையில், 2024-25 ஆம் ஆண்டில் வெறும் 2.94 கோடி பயணிகள் மட்டுமே வந்து சென்றுள்ளனர்; அதாவது, வெறும் 58 சதவீத கொள்ளளவு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை விமான நிலையத்தில் 3.5 கோடி பயணிகள் பயணிக்கக் கூடிய வசதி இருந்தும், 22.4 மில்லியன் பயணிகள் மட்டுமே பயன்படுத்தி உள்ளனர் என்பதால் இன்னும் 1.26 கோடி பயணிகள் கொள்ளளவு உபரியாகவே காலியாகக் கிடக்கிறது.

சென்னை விமான நிலையத்தின் சரக்கு கையாளுதல் திறனும் ஆண்டுக்கு 11.02 லட்சம் மெட்ரிக் டன்னாக உள்ள நிலையில், அதில் வெறும் 3.79 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே கையாளப்பட்டுள்ளது; இது மொத்தத் திறனில் வெறும் 34 சதவீதம் மட்டுமே ஆகும். இதன் மூலம், தற்போதுள்ள விமான நிலையச் சரக்குக் கட்டமைப்பு வசதிகளே 2046-2047 ஆம் ஆண்டு வரையிலான எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக உள்ளது என்று இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

மேலும், நிலத்தால் சூழப்பட்ட பெங்களூரு நகரத்துடன் சென்னையை ஒப்பிடுவது தவறு என்றும், கடல் மற்றும் வான்வழி என இரண்டையும் நம்பியிருக்கும் சென்னை, காமராஜர் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகங்கள் மூலமாகவே ஆண்டுக்கு 11.7 முதல் 12 கோடி டன் சரக்குகளைக் கையாண்டு வான்வழித் தேவைகளை வெகுவாக விஞ்சுகிறது என்றும் அதில் விளக்கப்பட்டுள்ளது.

பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது என்பது வெறும் பொருளாதார முடிவு மட்டுமல்லாமல், அது சுமார் 1,386 ஹெக்டேர் பரப்பளவுள்ள விவசாய நிலங்களையும், 34 நீர்நிலைகளையும் பாதுகாக்கும் மிக முக்கியச் சூழலியல் நடவடிக்கையாக அமையும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் இடப்பெயர்வு தவிர்க்கப்படுவதோடு, சுற்றுச்சூழலுக்கு ஏற்படவிருக்கும் மாபெரும் பேரழிவும் தடுத்து நிறுத்தப்படும்.

“>

 

கடந்த 2016-17 முதல் 2024-25 வரையிலான காலக்கட்டத்தில் தமிழகத்தின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி 137 சதவீதம் வரை அபார வளர்ச்சி கண்டுள்ள போதிலும், விமானப் பயணிகளின் போக்குவரத்து வளர்ச்சி வெறும் 27 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி என்பது விமானப் போக்குவரத்தின் எண்ணிக்கையை மட்டுமே சார்ந்து இல்லை என்பது தெளிவாக நிரூபணமாகியுள்ளது.