ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கோட்டையன் கலந்து கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், ஜெயலலிதா நினைவு நாள் என்றால் அனைவரும் சென்னையில் ஒன்று கூடி நினைவிடத்தில் மரியாதை செலுத்துவோம். ஜெயலலிதாவின் பிறந்த நாள் என்பதால் பொதுமக்களிடத்திலும் தொண்டர்களிடமும் ஆர்வத்தை உருவாக்குவதற்காக அந்தந்த பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதிமுகவின் ஆட்சி அமைய அனைவரும் பாடுபடுவோம் என்று தெரிவித்தார்.

அதிமுகவினர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று கூறும் நிலையில் அவருடைய பெயரை சொல்லாமல் அதிமுக ஆட்சி அமைப்போம் என்று மட்டுமே கூறுகிறீர்களே என்று செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அந்தக் கேள்விக்கு எந்த பதிலும் தராமல் அங்கிருந்து செங்கோட்டையன் நகர்ந்து சென்றார். அதேசமயம் செய்தியாளர்கள் சந்திப்புக்கு பிறகு தமக்கு பக்கபலமாக மற்றும் ஆதரவாக அதிமுக நிர்வாகிகள் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில் நிர்வாகிகளை தனக்கு பின்னால் அழைத்து வந்து நிற்க வைத்தார்  செங்கோட்டையன்.

இதனைத் தொடர்ந்து ஆடு மற்றும் ஓநாய் என எடப்பாடி பழனிச்சாமி துரோகிகள் குறித்து பேசியது பற்றிய கேள்விக்கும் முகம் சிவந்த செங்கோட்டையன் அதெல்லாம் அவங்க கிட்ட கேளுங்க என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டார். அதிமுகவில் செங்கோட்டையை நடத்திவரும் இந்த மௌனமான கலக குரல் எப்போது பூதாகரமாக வெடிக்குமோ என்பது கட்சியினரின் தவிப்பாகத்தான் உள்ளது.