பெங்களூருவில் அதிவேகமாக வந்த புல்லட் மோதியதில், எச்டிஎஃப்சி (HDFC) வங்கியில் பணியாற்றி வந்த 27 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை அதிரவைத்துள்ளன.

பெங்களூரு அருகே உள்ள  பகுதியைச் சேர்ந்தவர் யோகேஸ்வரி (27). இவர் ஒரு  எச்டிஎஃப்சி வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். நேற்று (பிப். 17) மதியம் சுமார் 12:30 மணியளவில், மதிய உணவு வாங்குவதற்காகத் தனது தோழியுடன் வங்கிக்கு வெளியே வந்துள்ளார்.

உணவை வாங்கிக்கொண்டு மீண்டும் வங்கிக்குத் திரும்பியபோது, பரபரப்பான ராஜ்குமார் சாலையை அவர்கள் கடக்க முயன்றனர். அப்போது யோகேஸ்வரியின் தோழி வாகனங்கள் வருவதைக் கண்டு சாலையின் நடுவே நின்றார். ஆனால், வாகனங்கள் வருவதற்குள் சாலையைக் கடந்துவிடலாம் என நினைத்த யோகேஸ்வரி முன்னேறிச் சென்றார்.

அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த ‘ராயல் என்பீல்டு புல்லட்’ பைக், யோகேஸ்வரி மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்குத் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உடனடியாக அருகில் உள்ள சுகுணா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அதிக ரத்தப்போக்கு காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்தில் பைக்கை ஓட்டி வந்த தீபன் (21) என்பவரும் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்தார். அவர் தற்போது ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். யோகேஸ்வரியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டபோலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பைக் அதீத வேகத்தில் வந்ததே இந்த விபத்துக்கு முதன்மைக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த விபத்து வீடியோ, பெங்களூரு சாலைகளில் பாதசாரிகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மீண்டும் ஒருமுறை ஏற்படுத்தியுள்ளது.