சிறையில் இருக்கும் உறவினர்களைப் பார்க்கச் செல்பவர்கள் இனிப்பு மற்றும் பழங்களை எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால், கர்நாடக மாநிலம் சிவமோகாவில் உள்ள மத்திய சிறைச்சாலைக்கு வந்த ஒரு விவசாயி, ஊழல் புகாரில் கைதான அதிகாரிக்கு கொசுவர்த்தி சுருளும், சோப்பும் பரிசாகக் கொண்டு வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலை சிறப்பு நில எடுப்பு அதிகாரியாகப் பணியாற்றிய சித்தலிங்க ரெட்டி என்பவர், சமீபத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையூட்டு பெற்றபோது கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவருடைய ஊழல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட சிக்மகளூரு மாவட்டத்தைச் சேர்ந்த விசுக்குமார் என்ற சந்தன மர விவசாயி, தனது எதிர்ப்பைத் தெரிவிக்க இந்த நூதன முறையைக் கையாண்டார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் திம்மக்கா பயன்படுத்திய சந்தனப் பாதுகையைத் தனது தலையில் சுமந்தபடி சிறைவாசலுக்கு வந்த விசுக்குமார், அதிகாரிக்காக சில பொருட்களைக் கொண்டு வந்திருந்தார். “அதிகாரி சிறையில் கொசுக்கடியால் அவதிப்படக்கூடாது” என்று கிண்டலாகக் கூறியபடி, கொசுவர்த்தி சுருள், மைசூர் சாண்டல் சோப்பு, ரொட்டி மற்றும் வாழைப்பழங்களை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முயன்றார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விசுக்குமார், இந்த அதிகாரி அரசாங்கத்தின் பணத்தைச் சேமிப்பதாகக் கூறி விவசாயிகளின் கழுத்தை நெரித்துள்ளார். சர்வதேச சந்தையில் பெரும் மதிப்புடைய எனது சந்தன மரத்திற்கு இவர் நிர்ணயித்த இழப்பீடு வெறும் 420 ரூபாய் மட்டுமே. ஆனால், அவரோ லஞ்சம் வாங்கி இன்று கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். அரசாங்கத்தின் ‘ஆறாவது திட்டத்திற்காக’ அவர் பணம் சேர்த்திருப்பார் போலிருக்கிறது. அவர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், அப்போதுதான் இன்னும் பல கோடி ரூபாய் லஞ்சப் பணத்தைச் சேமிக்க முடியும் என ஆவேசமாகவும் நையாண்டியாகவும் பேசினார்.
