நாட்டில் பெருகி வரும் வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், குறிப்பிட்ட சில அரசியல் தலைவர்களை மட்டும் இலக்கு வைத்து மனுத் தாக்கல் செய்ததற்குக் கடும் கண்டனம் தெரிவித்தது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், நாட்டின் தற்போதைய சூழல் நச்சுத்தன்மை வாய்ந்ததாக உள்ளதாக வாதிட்டார்.

மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், அதில் குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த முதல்வர்கள் மற்றும் தலைவர்களின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்தனர். “வெறுப்புப் பேச்சு என்பது அனைத்துத் தரப்பிலும் உள்ளது. அப்படியிருக்கையில், ஒரு குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் குறிவைத்து நீதிமன்றத்திற்கு வரக்கூடாது. பொதுநல மனுக்கள் நடுநிலையாக இருக்க வேண்டும்” என்று தலைமை நீதிபதி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நீதிபதி நாகரத்னா, “வெறுப்புப் பேச்சு என்பது மனித எண்ணங்களில் இருந்து பிறப்பது. வெறும் நீதிமன்ற உத்தரவுகளால் மட்டும் ஒருவரின் அடிப்படை எண்ணங்களை மாற்றிவிட முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும் இதனைத் தொடர்ந்து, தனிநபர்களின் பெயர்களை நீக்கிவிட்டு, திருத்தப்பட்ட புதிய மனுவைத் தாக்கல் செய்வதாக கபில் சிபல் ஒப்புக்கொண்டார். இதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கி நீதிமன்றம் விசாரணையை ஒத்திவைத்தது.