இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டம் தல்வாரா கிராமத்தில் கடந்த ஜூன் 30 மற்றும் ஜூலை 1ம் தேதிகளுக்கு இடையே இரவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், 10 மாத குழந்தையான நீதிகா தன் பெற்றோர்களையும் பாட்டியையும் இழந்து அனாதையாகிவிட்டார்.
தந்தை ரமேஷ் (31) உயிரிழந்தார். தாய் ராதாதேவி (24) மற்றும் பாட்டி பூர்ணு தேவி (59) ஆகியோர் காணாமல் போனார்கள். வீட்டில் தண்ணீர் புகுந்ததைத் தடுக்க ரமேஷ் வெளியே சென்ற போது, அவருடன் அவரது மனைவியும் தாயும் சென்றனர். ஆனால் மூவரும் திரும்பவில்லை.
இந்த பரிதாபமான சூழ்நிலையை தொடர்ந்து, இமாச்சலப் பிரதேச அரசு, நீதிகாவை “மாநிலத்தின் குழந்தை” (State Child) என அறிவித்துள்ளது. சுக்-ஆஷ்ரய் திட்டத்தின் கீழ், அந்த சிறுமியின் வளர்ச்சி, கல்வி, உடைமுறை, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு நேரடியாக வழங்கும் என வருவாய் அமைச்சர் ஜகத் சிங் நேகி தெரிவித்துள்ளார்.
அந்த சிறுமி எதிர்காலத்தில் மருத்துவர், பொறியாளர் அல்லது அதிகாரியாக வளர விரும்பினாலும், அரசே முழு செலவையும் ஏற்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், 18 முதல் 27 வயதுக்குள் உள்ள திருமணமாகாத, வசிப்பிடம் இல்லாத, வேலை இல்லாத அனாதைகளுக்கு அரசு உணவு, உறைவிடம், உயர்கல்வி, தொழில் பயிற்சி, திருவிழா செலவுகள், பயண அனுமதிகள் மற்றும் வீடு கட்ட மானியங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்குகிறது.
நீதிகாவும் இத்திட்டத்தின் பயனாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இத்துடன், மன உறுதியும் எதிர்கால நம்பிக்கையும் இந்த சிறுமிக்கு உருவாக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். தற்போது நீதிகா, தல்வாரா கிராமத்திலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள ஷிகௌரி கிராமத்தில் தன் அத்தை கிர்னா தேவியுடன் வசித்து வருகிறார்.
அந்த துரதிருஷ்டவச இரவில், வீட்டு நுழைவாயிலில் தனியாக அழுது கொண்டிருந்த நீதிகாவைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் பிரேம் சிங், முன்னாள் முதல்வர் ஜெய் ராம் தாக்கூரின் பாதுகாப்பு அதிகாரியான உறவினரிடம் தகவல் தெரிவித்து, குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
