பஸ்தி மாவட்டத்தில் உள்ள பரசராம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பேதிபூர் கிராமத்தில், புதிதாகத் திருமணமான பெண் ஒருவர், தனது திருமணமான ஏழாவது நாளிலேயே தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கியை நெற்றியோடு வைத்து சுட்டதால், அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சமீப மாதங்களில், காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்யும் பல வழக்குகள் உத்தரப் பிரதேசத்தில் பதிவாகியுள்ளன. இந்தக் கொடூரமான சம்பவத்தில் ஈடுபட்ட மனைவி, அவரது காதலன் மற்றும் ஒரு சிறுவர் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் பைக்கும் கைப்பற்றப்பட்டுள்ளது.விசாரணையில், கொலை செய்யப்பட்ட அனீஸ் (27) என்பவருக்கும், ரக்ஸானா என்பவருக்கும் நவம்பர் 13ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
திருமணத்திற்கு முன்பே ரக்ஸானா, தனது மாமாவின் ஊரைச் சேர்ந்த ரிங்கு கனௌஜியா என்பவரைக் காதலித்து வந்துள்ளார். திருமணம் முடிந்து அனீஸுக்கும், ரக்ஸானாவுக்கும் இடையே சண்டை இருந்துள்ளது. ரக்ஸானாவும் ரிங்குவும் சேர்ந்து, அனீஸைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
ரிங்கு பீகாரில் இருந்து துப்பாக்கி வாங்கி வந்துள்ளார். நவம்பர் 20ஆம் தேதி, ரிங்கு மற்றும் ஒரு சிறுவர் குற்றவாளி பைக்கில் வந்து, அனீஸ் வீட்டிற்கு அருகில் அவர் நடந்து சென்றபோது, வழி கேட்பதுபோல் சிறிது தூரம் அழைத்துச் சென்று அவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். இதையடுத்து, போலீசார் ரக்ஸானா மற்றும் ரிங்கு கனௌஜியாவைக் கைது செய்தனர். அனீஸ் மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கது
