ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே குண்ட்லி-மானேசர்-பல்வல் (கே.எம்.பி) விரைவுச் சாலையோரம் உள்ள புதர் பகுதியில், ஒரு விவசாயி துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு குழந்தையின் தலை மற்றும் ஒரு காலைக் கண்டெடுத்துள்ளார்.

அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அழுகிய நிலையில் இருந்த அந்த உடல் பாகங்களை மீட்டனர். குழந்தையின் மற்றொரு கால், உடல் மற்றும் இரண்டு கைகள் மாயமாகியிருந்தன. கண்டெடுக்கப்பட்ட பாகங்கள் அழுகியிருந்ததால், குழந்தையின் பாலினத்தை உடனடியாகக் கண்டறிய முடியவில்லை.

அந்தக் குழந்தைக்கு 6 முதல் 8 வயது இருக்கலாம் என போலீசார் மதிப்பிட்டுள்ளனர். குழந்தை வேறு எங்கோ கொலை செய்யப்பட்டு, கூர்மையான ஆயுதத்தால் உடல் துண்டிக்கப்பட்டு, அடையாளம் தெரியாமல் இருக்கப் பாகங்கள் இங்கு வீசப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சுமார் நான்கு முதல் ஆறு நாட்களுக்கு முன்பு இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்துத் தடயவியல் நிபுணர்களுடன் இணைந்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, குருகிராம் மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் காணாமல் போன குழந்தைகளின் விவரங்களைச் சரிபார்த்து வருகின்றனர்.

நரபலி போன்ற மாந்திரீக நம்பிக்கைகள் இந்தக் கொடூர கொலைக்குப் பின்னால் இருக்கலாம் என்ற கோணத்திலும், அல்லது வனவிலங்குகள் உடலைச் சிதைத்திருக்கலாமா என்ற சந்தேகத்திலும் போலீசார் தங்கள் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.