தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தகுதி உடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் நடைமுறை பணிகள் காரணமாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது மகளிர் உரிமைத் தொகை திட்ட பணிகள் முடிவடைந்து அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்து விட்டது.

இதனால் மீண்டும் ரேஷன் அட்டை வழங்கும் பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ள நிலையில் புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் உரிமை தொகை பெற விண்ணப்பிக்கலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது உரிமை தொகை திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை மேல்முறையீடு செய்வதற்கு அக்டோபர் 18ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதற்குள் புதிதாக ரேஷன் பெற்றவர்கள் இந்த திட்டத்தில் இணைய விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகுதி உள்ளவர்கள் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டத்தில் இணைவதற்கான வழிவகைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.