மருத்துவர் இட்ரிஸ் தாஹிர் ஒரு உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பில் கட்டச் சென்றபோது, அங்கிருந்த ஒருவர் அவரைத் தடுத்து நிறுத்தி, “பில்லை நான் ஏற்கெனவே கட்டிவிட்டேன்” என்று கூறி அதிர வைத்தார். குழப்பமடைந்த டாக்டரிடம் அந்த நபர், “டாக்டர், என்னை உங்களுக்கு அடையாளம் தெரியாது… ஆனால் ஐந்து மாதங்களுக்கு முன்பு என் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்து, இந்த இரட்டை குழந்தைகளை கையில் கொடுத்தது நீங்கள்தான்” என்று நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார். தன் கண் முன்னால் அந்த அழகான குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்த டாக்டரின் இதயம் ஒரு நிமிடம் அப்படியே உருகிப்போய்விட்டது.

​பணம் பெரிய விஷயமில்லை என்றாலும், அந்தத் தந்தையின் அன்பும் நன்றியும் டாக்டருக்கு ஒரு பெரிய ஊக்கத்தைக் கொடுத்துள்ளது. “இது போன்ற தருணங்களும், நோயாளிகளின் அன்பும்தான் எங்களைப் போன்ற மருத்துவர்களைத் தொடர்ந்து ஓட வைக்கிறது” என்று அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு வைரலாகி வரும் நிலையில், “நன்றியுணர்வு சொல்ல வார்த்தைகளே தேவையில்லை, ஒரு சின்ன செயல் போதும்” என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.